ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் ஊடகங்களுக்கு எதிராக வழக்கு!

Share this News:

மும்பை (13 அக் 2020): பாலிவுட் நடிகர்கள் சல்மான்கான், அமீர்கான், அஜேய் தேவ்கன் உள்பட பல்வேறு நடிகர்களை உள்ளடக்கிய 34 பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் நிறுவனங்கள் மற்றும் 4 பாலிவுட் அசோசியேசன்கள் இணைந்து ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக சுஷாந்த்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மற்றும் குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரியா சக்ரபோர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்தார். சுஷாந்த் தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து பாலிவுட் திரை உலகில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், சுஷாந்த் சிங் தற்கொலை மற்றும் அது தொடர்பான செய்திகளை ஆங்கில ஊடகங்கள் மிகவும் தீவிரமாக வெளியிட்டு வந்தன. மேலும், பாலிவுட் உலகின் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்து விட்டதாகவும் ஆங்கில ஊடகங்கள் குற்றச்சாட்டி வந்தன. இதில் ஷாரூக்கான், சல்மான்கான் என பாலிவுட்டின் முன்னனி நடிகர்களும் ஆங்கில ஊடகங்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகினர்.

குறிப்பாக, சுஷாந்த் தற்கொலை மற்றும் பாலிவுட்டை குறிவைத்து பிரபல ஆங்கில ஊடகங்களான ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ் ஆகிய செய்தி நிறுவனங்களும், அவற்றின் ஊடகவியலாளர்களான அருணாப் கோஷ்வாமி, ராகுல் ஷிவ்சங்கர், நாவிக்கா குமார் போன்றோர் பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும், பாலிவுட் திரைத்துறையை போதைப்பொருள் கும்பலுடன் ஒப்பிட்டு கருத்துக்களையும் வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில், பாலிவுட்டுக்கு எதிராக பொறுப்பற்ற, இழிவான மற்றும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக ஆங்கில ஊடகங்களான டைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி மற்றும் அதன் ஊடகவியலாளர்களான அருணாப் கோஷ்வாமி, ராகுல் ஷிவ்சங்கர், நாவிக்கா குமார், பிரதீப் உள்ளிடோர் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *