மீரட் (17 பிப் 2020): உத்திர பிரதேசம் மீரட்டில் சிஏஏ போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் குடும்பத்தினர் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில், கடந்த டிசம்பர் 20ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. 13 மாவட்டங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மதியம் மசூதிகளில் தொழுகையை முடித்தபின், தடையை மீறி போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலிஸார் கற்களை வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
மேலும், போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் பலியாகினர். அதைத்தொடர்ந்து மீரட், கான்பூர், பிஜ்னோர், லக்னோ, பிரோசாபாத் மற்றும் பிற இடங்களில் நடந்த போராட்டம் மற்றும் வன்முறையால் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர்.
அதுமட்டுமல்லாமல் போராட்டம் நடத்தியவர்கள் மீது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி, அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆளும் பா.ஜ.க அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், மீரட் மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூட்டில் பலியான 5 பேர் குடும்பத்தினர் தரப்பில், 28 போலிஸார் மற்றும் அடையாளம் தெரியாத சில போலிஸ்காரர்கள் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைச் சுட்டுக் கொன்றதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
போராட்டத்தை வன்முறையாக்கி மக்களை கொன்ற அதிகாரிகள் மீது பாதிக்கப்பட்டோர் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவத்திற்கு சமூக செயல்பாட்டாளர்கள் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதேபோல் நாடுமுழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தில் புகார் கொடுக்க முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.