புதுடெல்லி (17 ஜன 2020): டெல்லி ஜும்மா மசூதியில் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீண்டும் போராட்டம் நடத்தியுள்ளார்.
ஜாமீனில் வெளியாகியுள்ள சந்திரசேகர் ஆசாத், இன்றிரவு 9 மணிக்குள் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி ஜும்மா மசூதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக கடந்த டிசம்பர் 21-ம்தேதி டெல்லி ஜாமா மசூதியில் சந்திர சேகர ஆசாத் கைது செய்யப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் விதிக்கப்பட்டது. அதன்படி அவர், 4 வாரங்களுக்கு டெல்லியை விட்டு வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்ததது.
சந்திர சேகர் ஆசாத் ‘வன்முறையில் ஈடுபட்டதாகவோ, அதனை தூண்டும் வகையில் பேசியதாகவோ ஆசாதுக்கு எதிரான ஆதாரம் இல்லை. அவர் அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையை வாசித்திருக்கிறார். அது புனிதம் மிக்க ஆவணம்’ என்று கூறி நீதிபதி ஆசாதுக்கு ஜாமீன் வழங்கியிருந்தார்.
ஜாமீன் உத்தரவில், ரவிந்திரநாத் தாகூரின் கருத்தை கோடிட்டு காட்டியுள்ள டெல்லி நீதிபதி, அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு அனைத்து தரப்பினருக்கும் உரிமை உண்டு என்று தெரிவித்தார். இதனை அரசுகள் தடுக்க கூடாது என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.