புதுடெல்லி (10 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டவர்கள் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, அசிங்கமாக நடந்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி கார்கி கல்லூரியில் 3 நாட்கள் கல்லூரி விழா நடைபெற்று வந்தது. விழாவின் இறுதி நாளான சனிக்கிழமை அங்கு கல்லூரி மாணவிகள் நிகழ்ச்சிக்காக குழுமி இருந்தனர்.
இந்நிலையில் அவ்வழியே வந்த சிஏஏ ஆதரவு பேரணியில் ஈடுபட்ட கும்பல் கல்லூரிக்குள் நுழைந்து மாணவிகளிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத ஒரு மாணவி கூறும்போது, “சிஏஏ ஆதரவு கும்பல் சனிக்கிழமை பிற்பகல் 03:30 மணிக்கு கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தது. அவர்கள் அனைவரும் மது அருந்தியிருந்தனர். மேலும் ‘ஜெய்ஸ்ரீராம்’ என்ற முழக்கத்துடன் மாணவிளின் அங்கங்களை தொட்டு கொடுமை படுத்தினர். இது இரவு 09:30 மணி வரை நீண்டது. இவை அனைத்தையும் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.” என்றார்.
இன்னொரு மாணவி கூறுகையில், “சொல்லவே அசிங்கமாக இருக்கிறது. எங்கள் முன்னிலையில் அவர்கள் செய்த செயலை வாயால் கூற முடியாது.” என்றார் கண்ணீருடன். மேலும் கல்லூரி நிர்வாகம் மீதும் மாணவிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
நாட்டின் தலைநகரில் அரங்கேறிய இந்த அவலத்தை ஒரு ஊடகம் கூட கண்டு கொள்ளவில்லை என்பது கொடுமையிலும் கொடுமை.