நாங்கள் பாஜக பக்கம் இருக்கிறோம்: ஸ்டாலின் – கொந்தளிப்பில் காங்கிரஸ்!

Share this News:

புதுடெல்லி (21 ஜூன் 2020): இந்திய சீனா எல்லை விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்து வரும் காங்கிரஸுக்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவளிக்கவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சி கடும் கொந்தளிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது..

லடாக் கிழக்கு எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கை கைப்பற்ற சீனா முயற்சித்தது. இதை இந்திய வீரர்கள் முறியடித்தனர். இம்மோதலில் மொத்தம் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி, இணையவழியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்.

இதில் பேசிய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி சரமாரி கேள்விகளை எழுப்பினார். அனைத்து புலனாய்வுத் தரப்பும் தோல்வி அடைந்துவிட்டதை சோனியா காந்தி அடுக்கடுக்கான கேள்விகள் மூலம் முன்வைத்தார். இது மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

ஆனால் திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் காங்கிரஸுக்கு ஆதரவு கரம் நீட்டவில்லை மாறாக பாஜக அரசுக்கு ஆதரவளிக்கும் வகையில் பேசினர்.

குறிப்பாக ஸ்டாலின் தமது பேச்சில், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொருத்தவரை, 1962 இந்தியா – சீனப் போராக இருந்தாலும், 1971 இந்தியா – பாகிஸ்தான் போராக இருந்தாலும், 1999-ல் கார்கில் போராக இருந்தாலும், நாட்டின் பக்கமும், நாட்டு மக்கள் மற்றும் அரசாங்கத்தின் பக்கமும்தான் எப்போதும் நின்றிருக்கிறோம்.

பண்டித ஜவகர்லால் நேருவாக இருந்தாலும்; அன்னை இந்திரா காந்தியாக இருந்தாலும்; அடல் பிகாரி வாஜ்பாயாக இருந்தாலும், இந்நாட்டுப் பிரதமர்களின் கரத்தை வலுப்படுத்தியிருக்கிறோம். இந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டியிருக்கும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிப்பதில் எங்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை என பேசினார்.

ஆனால் இந்திய சீனா எல்லை விவகாரத்தில் பாஜக அரசு தோல்வி அடைந்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வரும் நிலையில் திமுகவின் பாஜக மீதான மிதமான போக்கு காங்கிரஸை எரிச்சலடைய வைத்துள்ளது.


Share this News: