புதுடெல்லி (14 மே 2020): கொரோனா ஊரடங்கை காரணமாக புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் தொடர்ந்து கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது தொடர்ந்து வருகிறது.
மராட்டிய மாநிலத்தில் இருந்து சுமார் 70 தொழிலாளர்களைக் ஏற்றிய லாரி ஒன்று உத்தரபிரதேசம் சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
அதிகாலை 3 மணியளவில் லாரி மத்திய பிரதேசம் குணாவில் ஒரு பைபாஸ் சாலையில் சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் லாரியில் பயணம் செய்த தொழிலாளர்கள் 8 பேர் அதே இடத்தில் பலியானார்கள். படுகாயம் அடைந்த 54 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல் புதன்கிழமை இரவு மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் ஒரு நெடுஞ்சாலையில் 6 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது உத்தரபிரதேச அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் 6 பேரும் பலியானார்கள்.
கடந்த வாரம், மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் ரயில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 16பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.