புதுடெல்லி (10 பிப் 2020): டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது ஜாமியா மாணவிகள் மீது போலீசார் இன்றும் கொடூர தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
ஜாமிய மில்லியா மாணவர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர். அப்போது போலீசார் மேற்கொண்ட கொடூர தாக்குதலில் மாணவிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக 10 மாணவிகள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஒரு மாணவி தெரிவிக்கையில், போலீசார் பெண்களின் மறைவிடங்களை குறி வைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதில் 10 மாணவிகளின் நிலை மிக மோசமாக உள்ளதால் ஜாமியா மருத்துவமனையிலிருந்து அல் ஷிஃபா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கனவே ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் அத்துமீறி நுழைந்து மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோக்கள் வைரலானது. இது நாடெங்கும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தாக்குதல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.