புதுடெல்லி (10 பிப் 2020): 2018ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., சட்டத்திருத்தம் அரசியலமைப்பு படி செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வு, இந்த சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன்பு எந்த விசாரணையும் அவசியமில்லை என்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளின் ஒப்புதலும் தேவையில்லை என்றும் கூறியுள்ளது.
இந்த அமர்வில் உள்ள மற்றொரு நீதிபதியான ரவீந்திர பாட் தனது தீர்ப்பில் கூறும்போது, ஒவ்வொரு குடிமகனும் சக குடிமகனை சமமாக நடத்த வேண்டும். சகோதரத்துவத்தின் கருத்தை வளர்க்க வேண்டும் என்றார்.
மேலும், எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் முதன்மை வழக்கு தொடரப்படாவிட்டால் நீதிமன்றம் எஃப்ஐஆர்-ஐ ரத்து செய்ய முடியும் என்று கூறிய அவர், முன் ஜாமீனை தாராளமாக பயன்படுத்துவது நாடாளுமன்றத்தின் நோக்கத்தை தோற்கடிக்கும் என்றும் கூறியுள்ளார்.