புதுடெல்லி (10 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதுவரை இந்தியாவில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளாவில் எர்ணாகுளம், ஜம்மு, கர்நாடகாவில் பெங்களூரு, பஞ்சாப் மற்றும் புணே ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியான நபருக்கு கரோனா இல்லை என்பது தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
திங்கள்கிழமை நிலவரப்படி நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47-ஆக அதிகரித்தது. திங்கள்கிழமை மட்டும் 3 வயதுக் குழந்தை உள்பட 8 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.