புதுடெல்லி (22 மார்ச் 2020): இந்தியாவில் கரோனா வைரஸால் பாதித்தோரின் எண்ணிக்கை 360 ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும், பலியானோர் எண்ணிக்கை 13,050 யையும் தாண்டியுள்ள நிலையில் இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் மார்ச் 31 வரை ரயில்வே சேவை ரத்து செய்யப்பட்டு, பேருந்து சேவைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 75 மாவட்டங்களை முடக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை மாலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 360 ஆக உள்ளது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 41. இதில், 24 பேர் குணமடைந்துள்ளனர், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.