கார்கோன் (01 மே 2022): ரம்ஜான் பண்டிகை மற்றும் இந்து திருவிழாக்களையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க மத்திய பிரதேசம் மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கின்போது “ஈத் தொழுகை வீட்டில் செய்யப்பட வேண்டும். மேலும், அட்சய திரிதியா மற்றும் பரசுராமர் ஜெயந்தியில் எந்த நிகழ்ச்சியும் மாவட்டத்தில் ஏற்பாடு செய்ய அனுமதிக்கப்படாது, ”என்று கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் (கார்கோன்) சுமர் சிங் முஜல்தா கூறினார்.
கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ராம நவமி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து நகரம் வன்முறைகளமானது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் பண்டிகை காலங்களில் மேலும் வன்முறை எதுவும் வெடிக்காமல் இருக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மே 1 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தளர்வு அளிக்கப்படும். அன்று கடைகள் திறந்திருக்கும் என்றும் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு பாஸ் வழங்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேவைப்பட்டால் முடிவுகள் மாறுதலுக்கு உட்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.