பாஜக தலைவர்கள் மீது எப்போது வழக்கு பதிவு செய்வீர்கள்? முழு டெல்லியும் எரிந்த பிறகா?: நீதிபதி சரமாரி கேள்வி!

Share this News:

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்திற்கு முன்பு வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி வன்முறை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியான முரளிதரன் தலைமையிலான அமர்வில் இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மக்களின் பாதுகாப்பை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றோம். எனவே இந்த வழக்கில் தான் கேட்கும் அனைத்து சந்தேகங்களுக்கும் பதிலளிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். மேலும் வன்முறையை தூண்டும் வகையிலான பேச்சுக்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள்?. குறிப்பாக கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா, பாஜகவின் எம்.எல்.ஏ. அனுராக் தாக்கூர் ஆகிய மூவரின் பேச்சுக்கள் என்பது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

அதன் மீது என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் என போலீசாரிடம் வினவினார். அதற்கு பதிலளித்த போலீசார் அந்த வீடியோக்களை பார்க்கவில்லை என தெரிவித்தார். உடனடியாக நீதிமன்றத்திலேயே அந்த வீடியோக்கள் போட்டு காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய நீதிபதி சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கு நீங்கள் எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்திருக்கும்போது, ​​இந்த வெறுப்பு உரைகளுக்கு எதிராக ஏன் அதை பதிவு செய்யவில்லை? வெறுப்பு பேச்சுதான், கலவரத்திற்கான அலாரம். எனவே, இதில் ஒரு குற்றம் இருப்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள விரும்பவில்லையா? நீங்கள் எப்ஐஆர் பதிவு செய்ய எது பொருத்தமான நேரம் என்று நினைக்கிறீர்கள்? ஒரு வழக்கை பதிவு செய்வதற்கு முன்பு எத்தனை உயிர்களை இழக்க வேண்டும்? நீங்கள் எப்போது எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்வீர்கள்? நகரம் முழுவதும் எரிந்த பிறகா? காவல்துறை என்றால் என்ன என்று நீங்கள் காட்ட வேண்டும் என தெரிவித்தார்.

இதனை அடுத்து வெறுப்பூட்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், தாமதம் ஏற்பட்டால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.


Share this News:

Leave a Reply