திருச்சி (26 பிப் 2020): தமிழகத்தில் என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
திருச்சியில் முக்கொப்பு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் புதிய அணையின் கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், , “கதவணை கட்டுமான பணியில் 35 % பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மொத்தமுள்ள 484 பைல்களில் ( தூண்களில் ) தற்போது வரை 288 அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. வரும் ஜனவரிக்குள் பணிகள் முடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெறுவது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது. காவிரியில் எங்கும் மணல் அள்ளப்படவில்லை. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் மிகக் குறைந்த அளவே மணல் அள்ளப்படுகிறது. எம்.சாண்ட் பயன்பாட்டை அதிகரித்துள்ளோம்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மாநில அரசுக்கு உட்பட்ட அதிகாரத்தில் அறிவித்துள்ளோம். மத்திய வேளாண் துறையும் மாநில அரசுக்கு உட்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளது. இதில், எந்தெந்த பகுதிகள் என்பதை ஆய்வு செய்துதான் அறிவித்துள்ளோம். மேலும் பகுதிகளை சேர்ப்பது குறித்த கோரிக்கை எனக்கு வரவில்லை.
பீகார் போல தமிழ்நாட்டிலும் என்.ஆர்.சி.க்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து அரசு பரிசீலனையில் உள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் குறித்து கட்சித் தலைமை கூடி முடியும். கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கு கேட்பது அவர்களது உரிமை. யாருக்கு வாய்ப்பு என்று கட்சித் தலைமை முடிவு செய்யும்.” என்றார்