புதுடெல்லி (04 மார்ச் 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
டெல்லி இனப்படுகொலைக்கு மத்திய அரசே காரணம் என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் இத்தனை பேர் படுகொலையை தடுக்கத் தவறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பிரதிபலித்து வருகின்றன. டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறியதாக கூறி இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் நேற்று நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இதற்கிடையே சபாநாயகர் ஓம் பிர்லா , எம்பிக்கள் யாரும் அவைக்கு முன்னே வர கூடாது. அவைக்கு முன் வந்து அமளி செய்ய கூடாது. அதேபோல் போஸ்டர்களை அவைக்கு எடுத்து வந்து கலகம் செய்ய கூடாது என்று கூறினார். அப்படி செய்தால் அந்த எம்பிக்கள் இந்த கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தார்.
எனினும் எதிர் கட்சியினர் அமித் ஷா பதவி விலகுவதில் தீர்மானமாகவே உள்ளனர்.