பரவும் டெல்டா பிளஸ் – தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

Share this News:

புதுடெல்லி (27 ஜூன் 2021): இந்தியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ‘டெல்டா பிளஸ்’ கொரோனா வைரஸ், புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்டா பிளஸ் பாதிப்புகளைக் கண்டறியத் தேவையான மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், கொரோனா சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் முன்னுரிமை அடிப்படையில் வேக்ஸின்கள் வழங்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

டெல்டா பிளஸ் கொரோனா கண்டறியப்பட்ட ராஜஸ்தான், தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு இது தொடர்பாக ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது.

மேலும் டெல்டா பிளஸ் கொரோனாவை ஒன்றிய அரசு கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.

காரணம், இதுவரை மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 20 பேருக்கு டெல்டா பிளஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் அடுத்த 6 முதல் 8 வாரங்களில் கொரோனா 3ஆம் அலை ஏற்படலாம் என்றும் அது டெல்டா பிளஸ் கொரோனாவால் ஏற்படலாம் என்றும் மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டிலேயே மத்தியப் பிரதேசத்தில் தான் டெல்டா பிளஸ் கொரோனாவால் முதல் உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டது.

அங்கு மொத்தம் 5 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு இருந்தது. அதில் வேக்சின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்ட 4 பேர் டெல்டா நலம் பெற்றனர். வேக்சின் எடுத்துக் கொள்ளாத நபரே கொரோனாவால் உயிரிழந்தார்.

எனவே, பொதுமக்கள் விரைவாகத் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *