புதுடெல்லி (30 ஏப் 2020): ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார விளைவுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள விளைவுகள், சந்திக்க வேண்டிய சவால்கள் உள்ளிட்டவை குறித்து திரு. ராகுல் காந்தி, ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய ரகுராம் ராஜன், “ கொரோனா ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழல் முன்னெப்போதும் இல்லாத ஒன்று. இந்தியாவில் ஊரடங்கு இன்னும் எவ்வளவு நாள்களுக்கு நீட்டிக்கப்படும் என்பது சரியாகத் தெரியவில்லை. அதனால் இதிலிருந்து வெளியேற அரசு நன்கு திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்.
இந்தியாவில் 100% வைரஸை விரட்டுவது என்பது தற்போதைய சூழலில் சாத்தியமற்றது. இந்தியாவில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனை விகிதம் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் வெகுதொலைவில் உள்ளது. இந்தியாவில் இப்போது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே வைரஸ் சோதனை விகிதத்தை இன்னும் பல மடங்கு அதிகரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர் இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு உதவ எவ்வளவு கோடி தேவைப்படும் என ராகுல் காந்தி, ரகுராம் ராஜனிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த ராஜன், “ இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை மக்களுக்கும் உதவ சுமார் 65,000 கோடி ரூபாய் தேவைப்படும். இந்த நிதியின் மூலம் மக்களுக்கு அரசு உதவ வேண்டும். இந்தமாதிரியான சூழல் பொதுவாக எந்த நாட்டுக்கும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது. ஆனால். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வழிகள் உள்ளன’ எனக் கூறியுள்ளார்.
சுமார் 28 நிமிடங்கள் வரை இவர்கள் இருவரும் உரையாடியுள்ளனர்.