புதுதில்லி (11ஆக 2020):‘குடும்பச் சொத்தில் ஆண் பிள்ளைகளைப்போல பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு’ என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெண் அடிமைத்தனத்தையும் ஆண் ஆதிக்கத்தையும் ஒழிப்பதுடன் பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி,1989-ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில், ‘குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு’ என்று சட்டம் கொண்டுவரப்பட்டது.
அதேபோல, 2005-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது இந்தியா முழுவதும் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை இல்லை என்று கூறியும், 2005-இல் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதால் அதற்கு முன்பு தந்தையை இழந்த பெண்களுக்கு எப்படி இந்தச் சட்டம் பொருந்து; என கேள்வி எழுப்பியும் உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். நீண்ட காலம் இழுவையுடன் நடந்துகொண்டிருந்த இந்த வழக்கில் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம், ‘ஆண் வாரிசுகளைப் போலவே பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு. இது 2005-ஆம் ஆண்டுக்கு முன்பு தந்தையரை இழந்த புதல்வியருக்கும் பொருந்தும். எனவே, குடும்பச் சொத்தை ஆண்களுக்குச் சமமாகப் பிரித்து வழங்குவதுபோல, பெண்களுக்கும் வழங்கியே ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.