புதுடெல்லி (03 மார்ச் 2020): டெல்லி வன்முறை வெறியாட்டத்தின் போது முன்னாள் CRPF வீரருடைய வீடும் எரிக்கப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) 22 ஆண்டுகளாக பணியாற்றி 2002ஆம் ஆண்டில் தலைமைக் காவலராக ஓய்வு பெற்றவர் அயிஷ் முகமது (58), தற்போது வடகிழக்கு டெல்லியில் ஒரு தற்காலிக நிவாரண முகாமில் தஞ்சம் புகுந்துள்ள அவர் கடந்த வாரம் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விவரித்தவை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “என் வீட்டிற்கு வன்முறையாளர்கள் 200 முதல் 300 பேர் வந்தனர். அவர்கள் கல் வீச்சிலும், துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டதோடு, வீட்டிற்கும் தீ வைத்தனர். அப்போது, எனது மகனுடன் வீட்டினுள் இருந்த நான், மொட்டை மாடி வழியாகப் பக்கத்து வீட்டில் குதித்துத் தப்பித்துச் சென்றோம். வரும் மார்ச் 29ம் தேதி எனது சகோதரி மகளின் திருமணம் நடைபெற உள்ளது. அதற்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளையும் அவர்கள் திருடிச்சென்று விட்டனர்” என்று அவர் கூறினார்.
1991ல் காஷ்மீரில் சேவையாற்றிய போது, பலத்த காயமடைந்துள்ளேன். தற்போது, இந்த கலவரத்தின் மூலம் இந்தியாவில் வாழ எனக்கு உரிமை இல்லை என்பது போல உள்ளது என்றார் உருக்கமாக.