புதுடெல்லி (03 மார்ச் 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி இனப்படுகொலைக்கு மத்திய அரசே காரணம் என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் இத்தனை பேர் படுகொலையை தடுக்கத் தவறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.
இந்த விவகாரம் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிரொலித்தது. டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறியதாக கூறி இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் நேற்று நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் மக்களவை 12 மணி வரையும், மாநிலங்களவை 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.