திருவனந்தபுரம் (10 ஜூலை 2021): கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் (ஜூலை10), நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் வார இறுதி நாட்களான இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
கேரளாவில் கெரோனா உறுதி செய்யப்படும் நபர்களின் விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது. இதனால், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்தது. முழு ஊரடங்கையொட்டி அரசு, தனியார் பஸ் போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் இயங்காது என அரசு அறிவித்து உள்ளது. ஓட்டல்களில் ஆன்லைன் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், மருத்துவம், சுகாதாரம், பத்திரிகை வினியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கேரளாவில் 19 பேர் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.