லக்னோ (06 பிப் 2020): உத்திர பிரதேசம் விஸ்வ இந்து மஹாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் மனைவியின் கள்ளத் தொடர்புதான் காரணம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உத்திர பிரதேசம் விஸ்வ ஹிந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் கடந்த (ஞாயிற்றுக் கிழமை) காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள், ரஞ்சித் பச்சன் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், தலையில், பலத்த காயமடைந்த ரஞ்சித், சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த கொலையின் பின்னணியில் திடுக்கிடும் தகவலாக ரஞ்சித் பச்சனின் இரண்டாவது மனைவி இருப்பது தெரிய வந்துள்ளது.
ரஞ்சித் பச்சனின் இரண்டாவது மனைவி ஸ்ம்ரிதி ஸ்ரீவஸ்தவா, ரஞ்சித் பச்சனிடம் விவாகரத்து கோரியிருந்தார். ஆனால் இதுவரை விவாகரத்து ஆகவில்லை. விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இது இப்படியிருக்க ஸ்ம்ரிதி ஸ்ரீவஸ்தவாவுக்கு வேறொருவருடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. கள்ளக் காதலனும் ஸ்மிரிதி ஸ்ரீவஸ்தவாவும் இணைந்தே இந்த கொலையை செய்துள்ளார்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது இந்த கொலை தொடர்பாக ரஞ்சித் பச்சனின் இரண்டாவது மனைவி மற்றும் கார் ஓட்டுநர் சஞ்சித் கவுதம் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இதுகுறித்து தெரிவித்த போலீஸ் கமிஷனர் சுஜித் பாண்டே, “இந்து தலைவர் என்பதால் இந்த கொலையின் பின்னணியில் தீவிரவாத தொடர்பு எதுவும் உண்டா? என ஆரம்பத்தில் விசாரித்தோம் , ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதை அடுத்து வழக்கின் திசையை மாற்றியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதனை வைத்து இந்த கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகிறோம்.” என்றார்