புதுடெல்லி (27 பிப் 2020):ஹரியானாவின் குருகிராமில் ஹிந்து சேனா அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டுள்ள ஊர்வலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இதில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் டெல்லியை அடுத்து ஹரியானா மாநிலத்தில் ஹிந்து சேனா அமைப்பைக் சேர்ந்த சுமார் 50 பேர் புதனன்று ஊர்வலமாக குருத்வாரா சாலை, சதார் பஜார் வழியாக மாவட்ட காவல்துறை இணை ஆணையர் அலுவலகத்தை அடைந்தனர்.
ஊர்வலத்தின் போது, ‘தேசத் துரோகிகளை நிற்க வைத்து சுட்டுக் கொல்லுங்கள்’ உள்ளிட்ட கோஷங்களை அவர்கள் எழுப்பினர். அவர்கள் செல்லும் பாதையில் காவல்துறையினர் இருந்த போதிலும் யாரும் அவர்களைத் தடுக்கும் விதமாக எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.