புதுடெல்லி (10 ஏப் 2020): இந்தியாவில் எந்த வித பயணமும் மேற்கொள்ளாமல், கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பு எதுவும் வைத்துக் கொள்ளாத நிலையில் 40 சதவீதத்தினர் கொரோனா தொற்றிற்கு ஆளாகி இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் 15 மாநிலங்களில் 36 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் மொத்தமாக பாதிக்கப்பட்ட 104 நபர்களில் 40 பேர் எவ்வித பயண வரலாற்றையும் கொண்டிருக்கவில்லை. இந்த குறிப்பிட்ட மாவட்டங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய முக்கிய பகுதிகளாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தனது அறிக்கையில் அடையாளம் காட்டியுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிப்படைந்த 104 நபர்களில் 58 சதவிகிதத்தினர் அதாவது 59 பேர் தொற்றால் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பது குறித்த எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. மேலும், இதில் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 85 ஆக இருக்கின்ற பட்சத்தில் 83 பேர் ஆண்களாவார்கள். அதாவது இவ்வாறு உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளில் 81 சதவிகிதத்தினர் ஆண்களாக உள்ளனர்.
SARI என்று குறிப்பிடப்படும் கடுமையான சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மகாராஷ்டிராவில் 21 பேரும், டெல்லியில் 14 பேரும், குஜராத்தில் 13பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், இந்த தரவுகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது என்றும், இதுவே ஒரு மாநிலத்தின் நோய் தாக்கத்தின் தன்மையினுடைய அளவீடு அல்ல என்பதையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்த சந்தேகத்தினை இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் முன்வைக்கப்பட்டபோது, SARI நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் சமூக பரவலுக்கான சாத்தியங்கள் இல்லை என்பதை கவுன்சில் தெளிவுபடுத்தியிருந்து குறிப்பிடத்தக்கது.