திருமலை (10 ஏப் 2020): திருமலை வேத பாடசாலையில் தங்கி படிக்கும் 5 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு படிக்கும் 470 மாணவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் நாட்டின் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு பொதுத் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன். விடுதிகளில் தங்கி படித்த நாட்டின் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதிகளிலிருந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் திருமலையில் உள்ள வேதபாட சாலையில் பயின்று வந்த மாணவர்கள் எவரையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பாமல் வைத்துள்ளது பாட சாலை நிறுவனம்.
இந்நிலையில் அங்கு பயிலும் மாணவர்களில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு பயின்று வந்த 470 மாணவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக அங்கு தங்கியிருந்த மாணவர்கள் மும்பையில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இதனை நிர்வாகம் முற்றிலுமாக மறைத்துள்ளது. இதன் விளைவு 5 மாணவர்கள் கொரோனாவின் கொடூர நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் அங்கு பயின்ற அனைத்து மாணவர்களையும் இது அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி தப்லீக் ஜமாஅத் முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து வெறுப்பூட்டும் பிரச்சாரம் மேற்கொண்டவர்களுக்கும் அரசுக்கும் ஏன் வேதபாடசாலையின் நிர்வாகம் மீது கவனம் இல்லாமல் போனது? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதன் மூலமாவது கொரோனாவுக்கு மதம் இல்லை என்பதை ஊடகங்கள் அறிய வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.