பெங்களூரு (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் முதல் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் மொஹம்மது ஹூசைன் சித்திக் சிகிச்சைப் பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் கல்புர்கியைச் சேர்ந்த மொஹம்மது ஹூசைன், ஹைதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவரது சளி மாதிரி பெங்களூருவில் உள்ள மருத்துவ ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தெலங்கானா அரசும் உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு முதல் பலியாக இது கருதப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 73 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், கொரோனாவால் முதியவர் கர்நாடகத்தில் உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.