புதுடெல்லி (19 மார்ச் 2020): கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் சர்வதேச விமானங்கள் இந்தியாவிற்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
னாவில் இருந்து பரவத்தொடங்கிய ‘கொரோனா வைரஸ்’ தற்போதைய சூல்நிலையில் உலகையே உலுக்கி வருகிறது. உலகில் மொத்தம் 176 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரையில் 9,149 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசால் இந்தியாவிலும் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதித்தவர்களில் கர்நாடகா, டில்லி, மத்திய பிரதேசத்தை சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று (மார்ச்-19) பஞ்சாபை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், மேலும் கொரோனா பரவாமல் தடுக்கும் விதமாக, வரும் 22-ம் தேதி முதல் அனைத்து வெளிநாட்டு விமானங்களுக்கும் ஒருவாரம் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சர்வதேச எல்லைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு உள்பட்டவர்களை வீட்டில் இருக்க அறிவுறுத்த மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசிய பணி தவிர மற்ற தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விமானம் மற்றும் ரயில்களில் மாணவர்கள், நோயாளிகள் தவிர அனைவருக்கும் சலுகைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மத்திய அரசுப்பணியாளர்களில் 50 சதவிகிதம் பேர், வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.