இந்தியாவின் அந்நிய முதலீட்டில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

Share this News:

புதுடெல்லி (02 ஜூன் 2020): இந்தியாவின் கடன் தரத்தை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மூடிஸ் நிறுவனம். மீண்டும் குறைத்துள்ளதால் இந்தியாவின் அந்நிய முதலீட்டில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உலகின் முன்னணி பொருளாதார தரநிர்ணய நிறுவனமான மூடிஸ், ஒவ்வொரு நாட்டின் பொருளாதார சூழலை பொறுத்து, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு, கடன் பெறும் தரம், தொழில் வளர்ச்சி, உள்ளிட்டவற்றை பட்டியலிடும்.

அந்த வகையில் இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தை கருத்தில் கொண்டு, நமது சர்வதேச கடன் தரத்தை குறைத்துள்ளது அந்நிறுவனம்.

பொதுவாக எந்தவொரு நிறுவனமும் வேறொரு நாட்டில் தொழில் தொடங்க திட்டமிடும்போது, அந்நிறுவனம் முக்கியமாகக் கவனம் செலுத்திப் பார்ப்பது இந்நிறுவனத்தின் தர அறிக்கையைதான்.

இந்நிலையில், இந்நிறுவனத்தின் அண்மை அறிக்கையில், இந்தியாவின் பிஏஏ2 என்ற கடன் தர நிலை, பிஏஏ3 என்ற நிலைக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த தரக் குறைப்பு காரணமாக இந்தியா மற்ற உலக நாடுகளிடம் கடன் வாங்குவது, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்டவற்றில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியபோது, இந்தியாவின் ரேட்டிங்கை பிஏஏ3 என்ற அளவுக்கு குறைத்தது மூடிஸ். அதன்பின் நீண்டகாலம் மாற்றமில்லாமல் இருந்து வந்த இந்த தர நிர்ணயம், 2018-ம் ஆண்டு பிஏஏ2 என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார சூழலால், இந்தியாவின் கடன் தரத்தை மீண்டும் பிஏஏ3 என்ற நிலைக்குக் குறைப்பதாக அறிவித்துள்ளது.


Share this News: