மோடியின் சரிவு – சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்!

Share this News:

புதுடெல்லி (13 பிப் 2020): பிரதமர் மோடியின் சமீபத்திய சரிவுகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

பல முக்கிய தலைவர்கள் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டபோதும், குடியுரிமை சட்டம், மக்கள் விரோத போக்கு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாஜக 8 இடங்களில் மட்டும்தான் வெற்றிபெற முடிந்தது.

இந்நிலையில் வெளிநாட்டு ஊடகங்கள் டெல்லி தேர்தல் முடிவு பற்றியும் சமீபத்திய பாஜக சரிவு குறித்தும் செய்திகள் வெளியிட்டுள்ளன. “கசப்பான டெல்லி தேர்தலில் மோடியின் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது” என்று தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தி வாஷிங்டன் போஸ்ட், “மோடியின் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வி” என செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் ஏழை மக்களுக்கான கொள்கையில் பணியாற்றி, அரசு பள்ளிகளை கட்டமைப்பது, குறைந்த விலையில் மின்சாரம் வழங்கல், இலவசமாக மருத்துவம் மற்றும் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் வழங்கிய ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான போட்டியில் பா.ஜனதா குழிக்குள் தள்ளப்பட்டது எனக்குறிப்பிட்டுள்ளது.

தி கார்டியன் பத்திரிகை, டெல்லியில் பா.ஜனதா தோல்வியை தழுவியதை மோடிக்கான தோல்வியென குறிப்பிட்டு உள்ளது. பிரித்தாளும் பிரசாரம் மேற்கொண்ட பா.ஜனதா மற்றொரு முக்கியமான மாநிலத்தில் பெரும் தோல்வியை தழுவியுள்ளது என செய்தியில் குறிப்பிட்டு உள்ளது.

சமீப காலமாக பா.ஜனதா பின்னடவை சந்தித்து உள்ளது என பி.பி.சி.யும் செய்தி வெளியிட்டு உள்ளது. ஊழல் எதிர்ப்பு பிரசாரம் செய்த கெஜ்ரிவால் டெல்லியில் நலத்திட்டங்களை கொண்டுவந்து எவ்வாறு அரசியலில் புகழ் பெற்றார் என்பதை குறிப்பிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *