ஜம்மு (26 ஏப் 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக காஷ்மீர் மாணவிகள் சொந்தமாக தைத்த முக கவசத்தை பலருக்கும் இலவசாமக விநியோகித்தனர்.
உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. ஒவ்வொரு நாடும், அங்கு வாழும் மக்களும் ஏதாவது ஒரு வகையில் இதனை எதிர்த்து போராடி வருகின்றனர். பல உயிரிழப்புகளை சந்தித்துவிட்ட இந்த கொரோனா காலத்தில் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதமும் வந்துவிட்டது.
இந்தியாவிலும் கொரோனா பல பகுதிகளில் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் தோதா மாவட்டத்தைச் சேர்ந்த 12 மாணவிகள் ஒன்றிணைந்து, கொரோனாவை எதிர்த்து ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தனர். அதுவும் இந்த ரமலான் மாதத்தில் நன்மைக்காகவும், மக்களுக்கு உதவும் வகையிலும் அது இருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.
அதன்படி அவர்களால் முடிந்த வகையில் சொந்தமாக முகக்கவசம் தைத்து பலருக்கும் இலவசமாக விநியோகித்தனர்.
இதுகுறித்து தெரிவித்த இந்த மாணவிகள் குழுவின் தலைவர் அஸ்மா பானு, “எங்கு பார்த்தாலும் முகக்கவசத்தின் அவசியத்தையே உணர்த்துகின்றனர். பிரதமர் மோடியும் அவர் பொதுமக்களுக்கு கோரிக்கை வைக்கும் போது முகக்கவசம் அணிய வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் பல இடங்களில் முகக்கவசம் கிடைப்பதில்லை. எங்கள் பகுதியில் முகக்கவசத்திற்கு அதிக அளவில் சிரம்மப்படுகிறோம். இதனை கருத்தில் கொண்டு நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம். இந்த ரமலான் மாதத்தில் இறைவனின் அன்பை பெறுவதற்காகவும், சதக்கா என்ற பிறருக்கு உதவும் தன்மைக்காகவும் நாங்கள் 12 பேர் முடிவெடுத்து சொந்தமாகவே முகக்கவசம் தைத்து விநியோகித்து வருகிறோம். ரமலான் தொடங்கியது முதல் இதுவரை 1100 முகக்கவசம் தயாரித்து விநியோகித்துவிட்டோம். இந்த வாரத்திற்குள் 20 ஆயிரம் முகக்கவசம் தயாரித்துவிடுவோம். எங்களால் முடிந்த அளவில் தொடர்ந்து இதனை செய்வோம்” என்றார்.
மேலும் இதனை முறையாக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து தேவையானவர்களுக்கு இதனை சேர்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த மாணவிகளின் செயலை காஷ்மீர் ராணுவ அதிகாரிகளும் பாராட்டியுள்ளனர்.