திருச்சி (26 ஏப் 2020): கொரோனா பாதிக்கப்பட்டு பலரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வைரஸின் பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ நோயிலிருந்து நிவாரணம் பெற்ற முஸ்லிம்கள் முன்வந்துள்ளனர்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. ஜாதி மத பேதமின்றை அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது.
இந்நிலையில் டெல்லி தப்லீக் ஆலோசனை கூட்டத்துக்கு சென்று திரும்பிய தமிழகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் அரசின் உத்தரவை அடுத்து தானாகவே முன் வந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
இதேபோல, திருச்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்தனர். இதில், ஷேக் முகமது என்பவருக்கு கடந்த ஒன்றாம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் கடந்த 16-ம் தேதி கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
இது இப்படியிருக்க கொரோனா நோயாளிகளுக்காக, ஷேக் முகமது பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளார். தான் மட்டுமல்லாமல், கொரோனாவிலிருந்து குணமடைந்த 31 இஸ்லாமியர்களும் பிளாஸ்மா தானம் செய்ய தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுமட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள முஸ்லிம்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.