லக்னோ (25 ஜன 2022): 2017 ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் இறந்ததில் குற்றம் சாட்டப்பட்டு குற்றமற்றவர் என விடுதலையான குழந்தை மருத்துவர் கஃபீல் கான். இவர், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூரில் போட்டியிட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் “கோரக்பூரில் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து சட்டசபை தேர்தலில் என்னால் போட்டியிட முடியும். எந்த கட்சி எனக்கு டிக்கெட் கொடுத்தாலும் நான் தயாராக இருக்கிறேன்” என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசும்போது கூறினார்.
நீங்கள் ஏதேனும் கட்சியுடன் தொடர்பில் உள்ளீர்களா அல்லது யாரையாவது அணுகுகிறீர்களா என்று கேட்டபோது, “ஆம், பேச்சு வார்த்தை நடந்து வருகிறது; எல்லாம் சரியாக நடந்தால் நான் தேர்தலில் போட்டியிடுவேன்” என்றார்.
கோரக்பூரில் ஆறாம் கட்ட தேர்தல் மார்ச் 3ஆம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.