ஜம்மு (03 மே 2020): ஜம்மு – காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், கர்னல், மேஜர் உள்ளிட்ட 5 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு – காஷ்மீரின் ஹந்த்வாரா என்ற பகுதியில், பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு, இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி உட்பட இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், கர்னல், மேஜர் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் மற்றும் காஷ்மீர் காவல்துறை துணை கமிஷனர் என, மொத்தம் 5 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து, பிரதமர் திரு. நரேந்திர மோதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஹந்த்வாராவில் வீரமரணம் அடைந்த நமது தைரியமான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், அவர்களின் வீரம் மற்றும் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது என்றும், அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு பாடுபட்டதுடன், மக்களை பாதுகாக்க அயராது உழைத்தனர் என்றும், அவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.