கொரோனாவால் அலறும் சென்னை – ஹாட் ஸ்பாட் ஆன கோயம்பேடு!

Share this News:

சென்னை (03 மே 2020): கடந்த 4 நாட்களாக சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

முழு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பு காய்கறிகளை வாங்க வேண்டும் என்று கோயம்பேடு மட்டுமல்லாமல் மற்ற காய்கறி சந்தையிலும் மக்கள் குவிந்தனர். அதன் விளைவாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது. அதன் தாக்கத்தை சுகாதாரத்துறை வெளியிடும் பாதிப்பு விவரத்தில் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை பார்க்க முடிகிறது.

இந்த 10 நாட்களில் அதிக பாதிப்பு வர கோயம்பேடு சந்தை முக்கிய காரணம் என கூறப்படுகிறது. மாவட்ட வாரியாக கூறுகையில் கடந்த 10 நாட்களில் 800-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னையில் ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்ப்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பலருக்கு தொற்று பரவியிருக்க கூடும் என்று கருதப்படுகிறது.

கோடம்பாக்கம் மண்டலத்தில் இன்று மட்டும் 60 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திரு.வி.க. நகரிலும் 25 பேருக்கு பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,341 குணமாகி வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.


Share this News: