தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை!

Share this News:

திருவனந்தபுரம் (16 ஜன 2020): கேரளாவில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) எடுக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க மக்கள் கொந்தளித்துள்ள நிலையில் கேரள அரசு ஒரு படிமேலே போய் சட்டமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து ஒட்டு மொத்த இந்தியாவிலும் இதனை எதிர்க்கும் உறுதியான மாநிலமாக திகழ்கிறது.

இந்த என்ஆர்சி, சிஏஏ மொத்த செயல்பாட்டிற்கும் அடிப்படை மக்கள் தொகை கணக்கெடுப்புதான். மக்கள் தொகை கணக்கெடுப்பை, என்பிஆர் என்று கூறுவார்கள். அதாவது தேசிய மக்கள் தொகை பதிவேடு. மத்திய அரசின் இந்த பதிவேட்டை, மாநில அரசுதான் உருவாக்கும்.

மாநில அரசின் அறிவிப்பின் பெயரில், மாநில அரசு அதிகாரிகள்தான் இந்த கணக்கெடுப்பை எடுப்பார்கள். இந்த பதிவேடு புதுப்பிக்கப்பட்டால்தான் குடி உரிமை சட்ட திருத்தம் , என்ஆர்சி என்று எதுவாக இருந்தாலும் செயல்படுத்த முடியும். அதாவது என்ஆர்சி, குடியுரிமை சட்டம் இரண்டுக்கும் பிள்ளையார் சுழியே இந்த மக்கள் தொகை பதிவேடுதான்

தற்போது என்பிஆர் பணிகளை தடை செய்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். என்பிஆர் பணிகளை எக்காரணம் கொண்டும் செய்ய கூடாது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர்கள் எந்த விதமான பணியையும் மேற்கொள்ள கூடாது. அப்படி செய்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply