லக்னோ (16 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் ராபின் வர்மா சிறையில் பட்ட சித்ரவதைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதில்,
உத்திர பிரதேசம் லக்னோவில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட சமூக செயற்பாட்டாளரும் ஆசிரியருமான ராபின் வர்மாவும் கைதானவர்களில் அடங்குவார்..
தற்போது வெளியாகியுள்ள அவர் போலீசார் பலர் தன்னை கடுமையாக தாக்கியதாக கூறிய அவர் “இஸ்லாமிய மாணவன் ஒருவன் என்னுடைய பிறந்தநாளன்று எனக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தான். இதைப் பார்த்த காவலர்கள், `நீங்கள் ஒரு இந்து. உங்களுக்கு ஏன் அதிகமாக இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள்? என்று கேட்டு உடல்ரீதியாக அதிகமாகத் துன்பப்படுத்தினர். `உனக்கு நடப்பதைப் போலவே உன்னுடைய மனைவிக்கும் குழந்தைக்கும் நடக்கும்’ என்று மிரட்டினர்.
மீண்டும், `உன்னுடைய இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து எங்கு செல்வாய்? உனக்கு ஏன் இவ்வளவு இஸ்லாமிய நண்பர்கள்’ என்று கேட்டு அடித்தனர். அடித்தவர்கள் காவலர் உடையில் இல்லாமல் சாதாரண உடையில் இருந்தனர். என்னுடைய விரல்களை அடித்துக் காயப்படுத்தினர்” என்றார். சிறையில் இருந்தபோது போர்வை, உணவு, தண்ணீர் ஆகிய அடிப்படைத் தேவைகளை தர மறுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
தொடர்ந்துபேசிய அவர், இந்தச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் நாட்டின் சிறுபான்மை மக்களை ஒடுக்குகிறது என்பதால் நான் எதிர்த்தேன். என்றும் அவர் தெரிவித்தார்.