புதுடெல்லி (15 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிராக கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள சட்ட மனறத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட நிலையில், அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது மனுவில், கேரள அரசு, சிஏஏ இந்திய அரசியல் சட்ட சாசனத்தின் பல பிரிவுகளை மீறுவதாகவும், அனைவருக்கும் சம உரிமை என்பதை மறுப்பதாகவும், நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பதாகவும், அதேபோல, 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் (திருத்தம்) ஆணையை எதிர்த்து கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. குறிப்பாக தனது மனுவில் சிஏஏ சட்டப் பிரிவு 14, 21 மற்றும் 25-க்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் சிஏஏவுடன் தேசிய குடிமக்கள் பதிவேடான என்ஆர்சியும் இணைந்தால், அது முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மாறும் என்று இந்தச் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் இந்தச் சட்டமானது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருக்கும் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை கொடுக்க உதவும் என்கிறது மத்திய அரசு தரப்பு.
இதற்கு முன்னரே சுமார் 60 மனுக்கள் சிஏஏவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தாலும், ஒரு மாநில அரசு இப்படி செய்வது இதுவே முதன்முறையாகும்.