கோலாலம்பூர் (15 ஜன 2020): பணத்துக்காக இந்தியா செய்யும் தவறை தட்டிக் கேட்காமல் இருக்க முடியாது என்று மலேசிய பிரதமர் மகாதீர் முஹம்மது தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரம் என மலேசிய பிரதமர் மகாதீர் தொடர்ந்து இந்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் மலேசியாவின் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு இந்திய அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இது மலேசியாவின் விமர்சனங்களுக்கு பதிலடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று உறுதியாக தெரிகிறது.
இந்நிலையில் இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக ”இந்தியாவிற்கு அதிக பாமாயில் விற்கிறோம். இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் குறித்த கவலை எங்களுக்கு உள்ளது. ஆனால், அதே நேரம் எங்கு தவறு நடந்தாலும் வெளிப்படையாக அதை சுட்டிக்காட்டவேண்டும். அதை நாங்கள் தொடந்து செய்வோம்,” என மலேசிய பிரதமர் மகாதீர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
மேலும் ”பணத்துக்காக தொடர்ந்து நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட தவறிவிட்டால், பல தவறுகள் நடக்கும். அவை நாம் செய்யும் தவறாகவோ, பிறரின் தவறாகவோ இருக்கலாம்,” என்று கூறினார் மகாதீர்.