திருவனந்தபுரம் (29 ஜன 2020): கேரள சட்டசபையில் கவர்னர் ஆரிப் முஹம்மது கானுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்திலும் மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. மாநில அரசு தனக்கு தெரியாமல் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்த கவர்னர், தன்னிடம் தகவல் தெரிவிக்காததற்கு அதிருப்தி தெரிவித்தார். இது தொடர்பாக மாநில அரசிடமும் அறிக்கை கோரியிருந்தார்.
இந்நிலையில், இன்று(ஜன.,29) துவங்கும் இந்த ஆண்டின் முதலாவது சட்டசபை கூட்டத்தில் இடம்பெறும் கவர்னர் உரையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் குறித்த பகுதியை படிக்க மாட்டேன் என கவர்னர் ஆரிப் கான் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சட்டசபை தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ஆரிப் கானை , அவைக்குள் நுழைய விடாமல் ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, கவர்னரை அவை காவலர்கள் பாதுகாப்புடன் முதல்வர் பினராயி விஜயன் இருக்கைக்கு அழைத்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.