தில்லி (20ஜூலை,2020):இந்திய ஜனநாயகத்தின் மீதான கடுந்தாக்குதலுக்கும், அதன் மதச்சார்பின்மையை அசைத்துப் பார்த்ததுமான பெரும் வெட்ககரமான சம்பவம் பாபரி மஸ்ஜித் இடிப்பு! இது தொடர்புடைய வழக்கில் முதல் குற்றவாளியாக இருப்பவர் முன்னாள் உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி!
பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் இராமர் கோவில் கட்டப்படும் எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்டது. ஆனால், பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்த சி.பி.ஐ. விசாரணை தனியாக நடந்து வருகின்றது. இதற்குறிய சிறப்பு நீதிமன்றத்தில், வரும் 24-ஆம் தேதி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாக ஆஜராகி வாக்குமூலம் தர முன்னாள் உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி-க்கு சிறப்பு நீதிமன்ற நீதியரசர் எஸ்.கே. யாதவ் உத்தவிட்டிருக்கின்றார்.
அதேபோன்று மற்ற குற்றவாளிகளான முன்னாள் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி மற்றும் சிவசேனா-வின் முன்னாள் எம்.பி. சதீஷ் பிரதான் ஆகியோருக்கு தத்தமது வாக்குமூலங்களை சிறப்பு நிதிமன்றத்தில் வழங்க, முறையே 23 மற்றும் 22-ஆம் தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாபரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பான சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில், இம்மூவர் மீது நடந்து வரும் வழக்குகளை வரும் ஆகஸ்ட் 31-க்குள் விரைந்து முடிக்குமாறு கடந்நத மே 8-ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ.-க்கு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.