கொல்கத்தா (27 மே 2020): மேற்கு வங்க அரசிடம் தெரிவிக்காமல் 36 இரயில்கள் இயக்கப்பட்டுள்ளன என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், நான்காவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் கையில் பணம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே செல்லும் நிலை உண்டானது. வழியில் உணவு இன்றியும் விபத்தில் சிக்கியும் சிலர் மரணம் அடைந்தனர். இது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்ல சிறப்பு இரயில்களை இயக்க தொடக்கியது. இதன் மூலம் இதுவரை சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலம் சென்றுள்ளதாக இரயில்வே தகவல் அளித்துள்ளது. இந்த இரயிலில் பயணம் செய்வோருக்கு உணவு, குடிநீர் வழங்கப்படவில்லை எனப் புகார்கள் எழுந்தன.
இந்த இரயில்கள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ”மும்பையில் இருந்து 36 இரயில்கள் மேற்கு வங்கத்துக்கு எங்களிடம் தெரிவிக்காமலேயே வந்துள்ளன. இது குறித்து மகாராஷ்டிர அரசிடம் கேட்ட போது அவர்களுக்கும் இந்த விவரம் தாமதமாகவே தெரிய வந்துள்ளதாகக் கூறி உள்ளனர். ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டே இவ்வாறு செய்கிறது” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.