புதுடெல்லி (22 பிப் 2020): ” நேரு உருவாக்கிய பாரத் மாதாகி ஜே என்ற வாசகம் ஒரு சாராரால் தவறாக பயன்படுத்தப்படுகிறது,” என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
ஜவஹர்லால் நேருவின் படைப்புகள் மற்றும் உரைகள் குறித்த புத்தகத்தை அறிமுகப்படுத்திய கூட்டத்தில் உரையாற்றிய மன்மோகன் சிங், பாஜகவை நேரடியாகவே குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் பேசுகையில், “நாடு மிகவும் கொந்தளிப்பான தருணத்தில் ஜவஹர்லால் நேரு இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். உண்மையில் அவரை நினைத்து பெருமைப் படுகிறேன். எல்லோருக்குமான ஒரு நாடாகவே இந்தியாவை அவர் வழி நடத்தினார். ஆனால் அவரின் நோக்கங்கள், திட்டங்கள் அனைத்தும் இப்போது இல்லாமல் போய் விட்டன. மேலும் அவரை தவறாகவே சித்தரிக்கின்றனர் ஒரு பிரிவினர். ஆனால் வரலாறு உண்மையை மறந்துவிடாது.” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “பாரத் மாதாகீ ஜே என்ற வார்த்தை எப்பேற்பட்ட பற்று மிக்க வார்த்தை. ஆனால் அது ஒரு சாராருக்கு மட்டும் சொந்தமானது போல சித்தரிக்கப்படுகிறது. இது மிகவும் தவறானது. இதனால் ஒட்டு மொத்த இந்தியர்களையும் ஒன்று சேர்த்தார் நேரு, ஆனால் இப்போது உள்ளவர்கள் இந்த வார்த்தையை வைத்து பிரிவினையை உண்டாக்குகின்றனர்” என்றார்.