புதுடெல்லி (11 பிப் 2023): அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹுவா மொய்த்ரா ஆற்றிய உரையை பிரபல பாலிவுட் நடிகை மீரா சோப்ரா பாராட்டியுள்ளார்.
அதானி-ஹிண்டன்பர்க் பிரச்சினையில் மஹுவா மொய்த்ராவின் பேச்சு தேசிய கவனத்தை ஈர்த்தது. மஹுவாவின் பேச்சு, “நான் இன்று இந்தியாவில் மிகவும் பிரபலமான நபரைப் பற்றி பேசுகிறேன். துரதிஷ்டவசமாக அது மாண்புமிகு பிரதமர் அல்ல. A இல் ஆரம்பித்து I இல் முடிபவர் ஒருவர். அது அத்வானி அல்ல. அவரது குழு A Company என்று அழைக்கப்படுகிறது. அவர் இந்த தேசத்தை முட்டாளாக்கியுள்ளார். நிதி அமைச்சரையும் முட்டாள் ஆக்கியுள்ளார்.
2019ஆம் ஆண்டு முதல் இந்த விவகாரத்தை மக்களவையில் எழுப்பி வருகிறேன். இதுகுறித்து நிதி அமைச்சகத்திற்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. பிரதமரே, இந்த ஏ உங்களை முட்டாளாக்கி விட்டார். நீங்கள் பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம் அவரும் உங்களுடன் இருந்தார்.
பிரதமரின் ரிமோட் கண்ட்ரோலை அவர் கையில் வைத்திருக்கிறார். இந்த நிறுவனத்திற்கு வெளிநாட்டு நிதியுதவி குறித்து விசாரணை நடத்த வேண்டும்.” என்று மஹுவா மொய்த்ரா பேசினார். அவரது அனல் பறக்கும் பேச்சு நாடெங்கும் பரபரப்பை கிளப்பியுள்ளது
இந்நிலையில் மஹுவா மொய்த்ராவை தனித் தங்கம் என பாராட்டியுள்ள நடிகை மீரா சோப்ரா, அவரது நாடாளுமன்ற உரையையும் பகிர்ந்துள்ளார்.
This is pure gold @MahuaMoitra 👏👏🖕👏 https://t.co/gBhA34K7ji
— Meera Chopra Kejriwal (@MeerraChopra) February 9, 2023
மீரா பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் பரினிதி சோப்ராவின் உறவினர். 2005 ஆம் ஆண்டு வெளியான அன்பே ஆருயிரே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். விக்ரம் பட்டின் 1920 லண்டன் மற்றும் சதீஷ் கௌசிக்கின் கேங் ஆஃப் கோஸ்ட்ஸ் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.