காயங்குளம் (19 ஜன 2020): கேரள மாநிலம் காயங்குளத்தில் ஜும்மா மசூதியில் இந்து திருமணம் நடைபெற்று சமூக நல்லிணக்கத்திற்கு மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் சோராவள்ளி கிராமத்தில் உள்ள அசோகன் – சிந்து தம்பதிகள் மகள் அஞ்சு. அசோகன் இரண்டு வருடங்களுக்கு முன்பே காலமாகிவிட்டார். இதனால் சிந்து குடும்பம் கடும் சிரமத்தில் மூழ்கி இருந்தது.
இந்நிலையில் அஞ்சுவுகும் சரத் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டது. மகளின் திருமணத்திற்காக, அருகில் இருந்த முஸ்லிம் குடும்பத்தினரை நாடினார் அஞ்சுவின் தாய் சிந்து. அப்போது அங்கிருந்த சோரவள்ளி ஜும்மா மசூதி செயலாளர் நஜ்முத்தீன் அலுமோட்டில், இதற்காக உதவுவதாகவும், திருமணத்தை மசூதியில் வைத்து நடத்த சம்மதமா? என சிந்துவிடம் கேட்க, சிந்து முழு மனதுடன் சம்மதித்தார்.
இதனை அடுத்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. மசூதி வளாகத்தினுள் 2,500 பேர் அமரும் வண்ணம் இருக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அழைக்கப் பட்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்கள், உணவு ஏற்பாடு என அனைத்தையும் மசூதி நிர்வாகமே முன் நின்று செய்தது.
திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமக்களை வாழ்த்தியதோடு இந் நிகழ்வை மத நல்லிணக்கத்திற்கு நல்லதோர் உதாரணம் என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக, மதப் பாகுபாடு நுழைப்பதால் CAA வை எதிர்த்து நாடு முழுக்க போராட்டங்கள் வலுப்பெற்று வரும் சூழலில், சமூக நல்லிணக்கம் பேணிய இச் செய்தி அனைத்து மாநிலங்களுக்கும் பரவி வைரல் ஆனது.