புதுடெல்லி (28 பிப் 2020): ‘டெல்லியில் நடைபெறும் வன்முறைக்கு போலீஸ்தான் முழுக் காரணம். அதற்கு நானே ஆதாரம்’ என்று பாஜகவின் கூட்டணி கட்சி எம்பியும், முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலின் மகனுமான நரேஷ் குஜ்ரால் பகீர் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
பஞ்சாப் சிரோன்மணி அகாலி தள் கட்சியின் மக்களவை உறுப்பினர் நரேஷ் குஜ்ரால். இவர் பஞ்சாபில் பாஜக ஆதரவுடன் போட்டியிட்டு எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
புதன்கிழமை (26-2-2020) இரவு 11.30 மணியளவில் இவருக்குத் தெரிந்த நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. உரையாடிய நபர் தானும் 15 முஸ்லிம்களும் வடகிழக்கு டெல்லியில் மவுஜ்புரில் உள்ள கோண்டா சவுக் என்னும் இடத்தில் வன்முறையாளர்களிடம் சிக்கியிருப்பதாகவும், உடனே உதவி புரியும்படியும் கதறியுள்ளார்.
செய்தி அறிந்து பதறிப்போன நரேஷ் குஜ்ரால் உடனடியாக டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, சூழலை விளக்கிச் சொல்லி, உடனே நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருக்கிறார். ஆனால் காவல்துறை, எம். பி. நரேஷ் குஜ்ல் தெரிவித்த இடத்திற்கும் செல்லவில்லை. அவரது நண்பருக்கும் முஸ்லிம்களுக்கும் உதவியும் அளிக்கவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த நரேஷ் குஜரால் தற்போது டெல்லி காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக், தில்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு விரிவாகக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், ‘நாடாளுமன்ற எம்.பி. யான நானே நேரடியாக போன் செய்து புகார் அளித்தும் அதற்கு இதுதான் கதி என்றால், காவல்துறையின் தயவில்லாமல் வன்முறை நிகழவில்லை என்பதுதான் உறுதியாகிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியிலும், ‘அன்று 1984 ஆண்டில் நடந்ததைப் போல், இன்றும் காவல்துறையினர் சிறுபான்மை மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்காமல் இருப்பதால்தான் அந்த மக்கள் அதிகம் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி வன்முறையில் 38 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.