புதுடெல்லி (24 ஜன 2020): உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட 503 எம்பிக்கள் இதுவரை சொத்து விவபரங்களை தாக்கல் செய்யவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், 90 நாட்களுக்குள் தங்களது பெயரில் இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்து, வாழ்க்கைத்துணையின் சொத்து விவரங்கள், தங்களுடன் இருக்கும் பிள்ளைகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால் 2019ம் ஆண்டு மே மாதம் மக்களவைக்குத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இதுவரை 503 எம்பிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது
சமூக ஆர்வலர் நதிமுதீன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு இந்த பதில் கிடைத்துள்ளது
மக்களவை உறுப்பினர்கள் எப்போதும் பொறுப்போடு இருக்க வேண்டும். வெளிப்படையாக பேசுவது மட்டும் போதாது, வெளிப்படையாக நடந்து கொள்ள வண்டும், அவர்கள் மீது மக்கள் வைத்த நம்பிக்கையால் தான் அவர்கள் மக்களவை உறுப்பினராகியுள்ளனர். அந்த நம்பிக்கையை அவர்கள் காப்பாற்ற வேண்டும் என்று நதிமுதீன் கூறியுள்ளார்.
டிசம்பர் 10ம் தேதி 2019 வரை 543 உறுப்பினர்களில் இதுவரை வெறும் 36 எம்.பி.க்கள் மட்டுமே தங்களது சொத்து விவரங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் தாக்கல் செய்துள்ளனர்.
சொத்து மதிப்பை தாக்கல் செய்யாத 503 எம்.பி.க்களின் பட்டியலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, வயநாடு எம்.பி. ராகுல் உள்ளிட்டோரும் அடங்குவர்.