ஐதராபாத் (02 ஜன 2020): குடியுரிமை சட்டம், குடியுரிமை பதிவேடு உள்ளிட்டவை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கக் கூடாது என வலியுறுத்தப் போவதாக முஸ்லிம் மதகுருக்கள் முடிவெடுத்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஷஹீன் நகர் மஹத் இஸ்லாமியாவில் மவுலானா காலித் சைஃபுல்லா ரஹ்மானி ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அழைக்கப் பட்டிருந்த முக்கிய மதகுருக்கள் பங்கேற்றனர்.
குடியுரிமை சட்டம் தொடர்பாக விவாதிக்கக் கூடிய இக்கூட்டத்தில் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக மத்திய அரசின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளான CAA, NRC, NPR ஆகியவை குறித்து விவாதிக்கப் பட்டது. மேலும் பொதுமக்கள் இது தொடர்பான ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்க வேண்டாம் என நாடெங்கும் வலியுறுத்தப் போவதாக இக்கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது. இதுவும் ஒரு வகை அமைதி வழி போராட்டம் என்பதாகவே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து விரிவாக விவாதிக்க டெல்லியில் நாட்டின் பல்வேறு முஸ்லிம் தலைவர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர்.
இக்கூட்டத்தில் மவுலானா அர்ஷத் மதனி (ஜமியத் உல் உலமா), மவுலானா அப்துல் காசிம் நவுமானி (இயக்குநர் தாருல் உலூம் தேவ்பந்த்), மவுலானா செய்யது முஹம்மது மதனி (செயலர் ஜமியத் உல் உலமா), மற்றும் மேற்கு வங்க அமைச்சர் மவுலானா சித்தீக்குல்லாஹ் சவுத்ரி ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.