புதுடெல்லி (28 பிப் 2020): டெல்லி கலவர சூழலில் இந்து (சிவா) கோவிலை முஸ்லிம்கள் பாதுகாத்துள்ளனர்.
டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும் ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டது. இதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள்.
இந்நிலையில் ஒருபுறம் அமைதி வழி போராட்டத்தை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் மத மோதலாக மாற்ற முயற்சிக்க இதுவரை 41 பேரை பலி வாங்கியுள்ளது டெல்லி வன்முறை.
மத ஒற்றுமைக்கும் டெல்லி இந்து முஸ்லிம் மக்கள் முன்னுதாரணமாக இருந்துள்ளனர். வடகிழக்கு டெல்லியில் முஸ்லிம் மக்கள் அங்கிருந்த சிவா கோவிலையும் பாதுகாத்துள்ளனர். ஷகீல் அஹமது என்பவருடன் இணைந்து பல முஸ்லிம்கள் அங்கிருந்த சிவா கோவிலை பாதுகாத்துள்ளதாக ஷகீல் அகமது தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,” இப்பகுதியில் வன்முறையால் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனால் அரசு எங்களை கண்டுகொள்ளவில்லை. தொண்டு நிறுவனங்கள்தான் எங்கள் பகுதிக்கு வருகை புரிந்து எங்கள் சூழலை கேட்டறிந்து உதவி புரிந்தனர். இப்பகுதியில் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகிறோம். ஆனால் எங்கிருந்தோ வந்த வன்முறை கும்பல்தான் எங்களை தாக்கிவிட்டு சென்றது” என்றார்.
டெல்லி அசோக் நகர் பகுதியில் வன்முறை வெறியாட்டத்தில் மசூதி ஒன்று தீ வைத்து கொளுத்தப்படதும், அதன் மினாரா கோபுரம் உடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.