மும்பை (28 பிப் 2020): மகாராஷ்டிராவில் உள்ள கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் நவாப் மாலிக் தெரிவிக்கையில், “தற்போதைய சட்டசபை கூட்டத்தொடர் முடிவதற்குள், மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்னர் இது தொடர்பான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என்றார்.
அமைச்சர் நவாப் மாலிக் சிவசேனா கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.