கொல்கத்தா (26 மார்ச் 2022): மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடந்த தீ வைப்புத் தாக்குதலில், மூன்று பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் ஒரு கும்பலால் அவர்களின் வீடுகளில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
திங்களன்று உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸின் பஞ்சாயத்துத் தலைவர் பாது ஷேக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ராம்பூர்ஹாட் பகுதியில் உள்ள போக்டுய் கிராமத்தில் இந்தப் படுகொலை நிகழ்ந்தது. வன்முறை தொடர்பாக இதுவரை 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தடயவியல் நிபுணர்களால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின்படி, பாதிக்கப்பட்டவர்கள் உயிருடன் எரிக்கப்படுவதற்கு முன்பு கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். பின்பு தீ வைத்து எரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்று, ராம்பூர்ஹாட் மருத்துவமனையின் அதிகாரியை மேற்கோள் காட்டி PTI தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த, மெஹ்லால் ஷேக் மற்றும் பனிரூல் ஷேக் ஆகியோர் மசூதிக்கு இஷா (இரவு) தொழுகை நடத்தச் சென்றதால் இந்த வன்முறையிலிருந்து தப்பினர்.
இதுகுறித்து கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர் ஷேக் தெரிவிக்கையில்,“வீடுகளில் தாக்குதல் நடந்தபோது, நானும் மூத்த சகோதரனும் மசூதியில் இஷா பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம். பிரார்த்தனை செய்துவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது எங்கள் குடும்பம் முழுவதும் எரிந்த நிலையில் இறந்து கிடந்தன.”என்று ஷேக் தெரிவித்துள்ளார்.
அவரது தாய், மூத்த சகோதரி, மனைவி, மகள்கள், மருமகன் மற்றும் குழந்தைகள் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வன்முறையிலிருந்து தப்பவில்லை.
ஏற்கனவே கொல்லப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவருடன் தொடர்புடையவர்கள் அவரது குடும்பத்தினரின் கொலைகளுக்கு காரணம் என்று ஷேக் குற்றம் சாட்டியுள்ளார்.
“எனது குடும்பத்தை ஏன் குறிவைத்தார்கள் என்று தெரியவில்லை?” என்று கூறிய ஷேக் “எங்களுக்கு நீதி வேண்டும். எப்படியும், எந்த விலை கொடுத்தேனும் எங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்றார்.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை, கொல்கத்தா உயர்நீதிமன்றம் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும் ஏப்ரல் 7 ஆம் தேதி அடுத்த விசாரணையின் போது ஆரம்ப அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.