புதுடெல்லி (26 மார்ச் 2020): கொரோனா தொற்று இந்தியா முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர் நலனுக்காக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
► மத்திய அரசின் ‘கிஷன் சம்மான் நிதி’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், 2000 ரூபாய் தற்போது உடனடியாக வழங்கப்படும். இதன் மூலம், 8.69 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
► ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும். இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர்.
► ஏழை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைப் பெண்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.1000 இரண்டு தவணைகளாக வழங்கப்படும். 3 கோடி பேர் இதில் பயன்பெறுவர்.
► ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு தலா ரூ.500 வழங்கப்படும். இதன் மூலமாக 20 கோடி பெண்கள் பயன்பெறுவார்கள்.
► உஜ்வாலா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கேஸ் இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பெண்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும். இதில் 8.3 கோடி பெண்கள் பயன்பெறுவர்.
► மகளிர் சுய உதவி குழுக்களில் இருக்கும் 7 கோடி குடும்பப் பெண்களுக்கு இதுவரை 10 லட்சம் உதவி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இது 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
► வருங்கால வைப்பு நிதி காப்பீட்டுத் தொகையை(24%) அடுத்த 3 மாதத்திற்கு அரசே செலுத்தும். அதாவது நிறுவனம் தரப்பில் வழங்கப்படும் 12% தொகை, தொழிலாளர்கள் தரப்பில் இருந்து செலுத்தப்படும் 12% என மொத்தம் 24% தொகையையும் அரசே செலுத்தும். 100 பணியாளர்களுக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் மற்றும் மாத வருமானம் ரூ. 15,000க்கு குறைவாக இருக்கும் பணியாளர்களுக்கு இது பொருந்தும்.
► அடுத்ததாக, பி.எப் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள 75% தொகை அல்லது 3 மாத ஊதியம், இதில் எது குறைவாக உள்ளதோ அதை எடுத்துக்கொள்ள முடியும்.
► கட்டடத் தொழிலாளர்களுக்கான நல நிதியில் இருந்து (ரூ.31,000 கோடி உள்ளது) அவர்களுக்குத் தேவையான உதவித்தொகையை மாநில அரசு வழங்கலாம்.
முன்னதாக, நாட்டில் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும்,
மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.